Home News ரூ.200 கோடி துவரம் பருப்பு டெண்டர் ரத்து: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் என்ன நடந்தது?

ரூ.200 கோடி துவரம் பருப்பு டெண்டர் ரத்து: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் என்ன நடந்தது?

98
0

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான துவரம் பருப்பு டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

“உயர் பொறுப்புகளில் நேர்மையான அதிகாரிகளை நியமித்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது” என்கிறார் `அறப்போர்’ இயக்கத்தின் ஜெயராம். என்ன நடக்கிறது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்? தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் நிதி உதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில் முதல்கட்டமாக ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 13 வகையான மளிகைப் பொருள்களையும் ரேசன் கடைகள் மூலமாக தமிழக அரசு விநியோகிக்க உள்ளது. முன்னதாக, புதிய அரசு பொறுப்பேற்பதற்கு 2 நாள்களுக்கு முன்னர் (மே 5 ஆம் தேதி) 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணியின் கவனத்துக்கு அறப்போர் இயக்கத்தினர் சில தகவல்களைக் கொண்டு சென்றனர். இந்நிலையில், இன்று துவரம் பருப்பு டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் சிவில் சப்ளை அதிகாரிகளும் சில தனியார் நிறுவனங்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலமாக 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வாங்குவதற்காக ஏப்ரல் 26 ஆம் தேதி டெண்டர் ஒன்று கோரப்பட்டது. இந்த டெண்டரை மே 5 ஆம் தேதி திறந்துள்ளனர். இந்த டெண்டரில் மூன்று நிறுவனங்கள் பங்கெடுத்தன. இதில், ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை 143 ரூபாய் என ஒரு நிறுவனம் விலை குறிப்பிட்டுள்ளது. மற்ற 2 நிறுவனங்கள் முறையே 145 ரூபாய், 146 ரூபாய் என விலையைக் குறிப்பிட்டுள்ளன. எனவே, `143 ரூபாய் என்பதே சிறந்த விலை’ என சிவில் சப்ளை துறையின் உயர் அதிகாரிகள் முடிவு செய்து அந்த நிறுவனத்துக்கே டெண்டர் கொடுக்க முடிவு செய்கின்றனர். ஆனால், மொத்த விலையில் 50 கிலோ துவரம் பருப்புக்கான விலையே 5,000 ரூபாய்தான் என்பதற்கான ரசீதை நான் வாங்கியுள்ளேன். அதிலும், இது தரமான பருப்புக்கான விலையாக உள்ளது. ரேஷன் கடைகளில் என்ன மாதிரியான பருப்பு கிடைக்கிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தரமான துவரம் பருப்பு என்றாலும் கிலோ 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. அரசின் அமுதம் பல்பொருள் அங்காடியின் சில்லறை விற்பனையில் கிலோ 106 ரூபாய்க்கு துவரம் பருப்பு கிடைக்கிறது. இந்த ரசீதையும் அரசுக்கு அனுப்பிய புகாரில் நான் இணைத்துள்ளேன். அரசின் பல்பொருள் அங்காடியில் லாபத்தோடு சேர்த்தே 106 ரூபாய்க்குத்தான் விற்கப்படுகிறது” என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ்.