தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகச் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இத்திருக்கோயிலுக்குத் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
குறிப்பாகக் கோயிலுக்கு வருபவர்கள் உண்டியலில் தங்களின் காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில் கோயிலில் உண்டியலிலிருந்த பணத்தை இணை ஆணையர் கல்யாணி தலைமையில் வெளியே எடுத்துக் கணக்கிடும் பணம் தொடங்கியது.
கோயிலிலிருந்த 37 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் உதவி ஆணையர்கள் ஞானசேகர், வெக்காளியம்மன் கோயில் உறையூர் மோகனசுந்தரம், திருச்சி இந்து சமய அறநிலையத்துறை சமயபுரம் மாரியம்மன் கோயில் மேலாளர் லட்சுமணன், செயல் அலுவலர்கள் முன்னிலையில் பணி நடைபெற்றது.
ஆர்வத்துடன் காணிக்கையை எண்ணுவதற்காக தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளைக் கணக்கிட்டனர்.
அதன்படி, ரூபாய் 1 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரத்து 396 ரொக்கமும், 3 கிலோ 481 கிராம் தங்கமும், 5 கிலோ 430 கிராம் வெள்ளியும், 174 அயல்நாட்டு நோட்டுகளும் உண்டியல்களில் காணக்கிக்கையாக வந்துள்ளது கணக்கிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. இதற்கு முன்பாக கடந்த 23ஆம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.