மனிதர்கள் சர்க்கரை உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வதால் பல நன்மைகள் இருக்கின்றன என்பதை அறிவோம். ஆனால் மனிதர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் அளவை விட குறைவாக சர்க்கரை சாப்பிடும் போது தலைவலி, சோர்வு, எண்ண மாற்றங்கள் போன்ற சில எதிர்மறை விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.
இதற்கான காரணங்கள் இதுவரை சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளைச் சாப்பிடும் போது, மனித மூளை எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதோடு அந்த அறிகுறிகள் தொடர்புடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நாம் வழக்கமாக பயன்படுத்தும் சர்க்கரை (Table sugar) என்பது சுக்ரோஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கரும்பு, சர்க்கரை, கிழங்கு, போன்ற பொருட்களில் இருக்கிறது.
இன்று அபரிவிதமாக உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. உணவின் சுவையைக் கூட்ட, உணவில் சுக்ரோஸ் மற்றும் பல வகையான சர்க்கரைகள் சேர்க்கப்படுகின்றன. உணவில் சர்க்கரை சேர்ப்பதால் சுவை கிடைப்பது போக, மனித மூளையிலும் சில தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
நம் வாய்க்குள் சுக்ரோஸ் சென்ற உடன் இனிப்பு சுவை ரெசப்டார்கள் வேலை செய்யத் தொடங்குகின்றன. அது மூளையில் டோபாமைன் என்கிற ரசாயனத்தை வெளிப்படுத்துகிறது.