Home இந்தியா Vinay Kumar Saxena: டெல்லி துணைநிலை ஆளுநராக பதவியேற்றார் வினய் குமார் சக்சேனா

Vinay Kumar Saxena: டெல்லி துணைநிலை ஆளுநராக பதவியேற்றார் வினய் குமார் சக்சேனா

60
0

டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக, வினய் குமார் சக்சேனா பதவி ஏற்றுக் கொண்டார்.

டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக, வினய் குமார் சக்சேனா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைநகர் டெல்லியின் 21வது துணைநிலை ஆளுநராக செயல்பட்டு வந்தவர் அனில் பைஜால். 1969 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் டெல்லி துணைநிலை ஆளுநராக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே, 76 வயதான அனில் பைஜால், கடந்த 18 ஆம் தேதி டெல்லி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதி இருந்தார். தொடர்ந்து, அனில் பைஜாலின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

இதை அடுத்து, டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இன்று, டெல்லியின் 22வது துணைநிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா பதவியேற்றார். ராஜ் நிவாசில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சங்கி அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். புதிய துணைநிலை ஆளுநராக பதவியேற்றுள்ள வினய் குமார் மத்திய காதி மற்றும் கிராமப்புற தொழில் துறை ஆணையம் தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.