Home இந்தியா 12 மணி நேர கட்டாய வேலை – நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீன அரசு

12 மணி நேர கட்டாய வேலை – நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீன அரசு

78
0

சீனாவின் சில பெரிய நிறுவனங்களில் பல இளம் தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார்கள்.

‘996 பணி கலாசாரம்’ என்று அறியப்படுகிற இந்த கொடூரமான உழைப்புச் சுரண்டல் முறை சட்டவிரோதமானது என அத்தகைய பணி முறையை அமல்படுத்தியிருக்கும் நிறுவனங்களுக்கு சீன ஆட்சியாளர்கள் கடுமையான நினைவூட்டலை விடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை சீனாவின் தொழிலாளர் அமைச்சகம் மற்றும் நீதிமன்றம் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், தொழிலாளர் பிரச்னைகள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய 10 உத்தரவுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

அவற்றில் பல வழக்குகள், கூடுதல் பணி நேரத்துக்கு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் தொழிலாளர்கள் தொடர்புடையவை. தொழில்நுட்பம், ஊடகம், கட்டுமானம் என பலதரப்பட்ட துறைகளில் இப்படிப்பட்ட பணிக் கலாசாரம் கடைப்பிடிக்கப்படுவது தொடர்பான வழக்குகள் அவை. அந்த வழக்குகளின் முடிவுகள் ஒன்று போல இருந்தன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழக்கில் தோல்வியை சந்தித்தன.

“சட்டரீதியாக, தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஓய்வு நேரம் அல்லது விடுமுறை நாட்களை பெற உரிமை உண்டு. தேசிய பணி நேர முறைக்கு இணங்குவது வேலைக்கு பணியமர்த்தும் நிறுவனங்களின் கடமை,” என்று அரசு விடுத்துள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் நிலவும் தொழிலாளர் பிரச்னைகளுக்கு தீர்வு காண தற்போதைய வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்படும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சீன அரசின் இந்த தெளிவான எச்சரிக்கை, அதிக நேரத்துக்கு வேலை செய்யும் குடிமக்கள் உண்மையான மாற்றத்தைக் காண வழி வகுக்குமா? சீனாவின் தொழிலாளர் சட்டங்களின்படி, ஒரு நிலையான வேலை நாள் என்பது எட்டு மணி நேரம், வாரத்துக்கு அதிகபட்சமாக 44 மணி நேரம் வேலை செய்யலாம். அதைக் கடந்தும் பணியாற்றும் எந்த தொழிலாளருக்கும் கூடுதல் உழைப்புக்கான ஊதியம் தரப்பட வேண்டும்.

ஆனால் நடைமுறையில் இது சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. நாட்டின் பல பெரிய நிறுவனங்களில் – குறிப்பாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையில் – ஊழியர்கள் பெரும்பாலும் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், கூடுதல் பணி நேரத்துக்கு எப்போதும் அவர்கள் ஈடுசெய்யப்படுவதில்லை. பல ஆண்டுகளாக ஊழியர்கள் தங்களுடைய மிருகத்தனமான பணி நேர அட்டவணையைப் பற்றி முணுமுணுத்துள்ளனர், சிலர் போராட முயன்றனர். 2019ஆம் ஆண்டில், ‘புரோகிராமர்’ பதவி வகித்த குழுவினர் சிலர், குறியீடு பகிர்வு தளமான கிட்ஹப்பில் ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதில் கூடுதல் பணி நேரத்துக்கு ஊழியர்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் வகையிலான திறந்தவெளி கோடுகளை அவர்கள் பதிவேற்றினர். அவர்களின் செயல்பாடு அப்போது ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாயின.