Home இந்தியா தமிழ் சினிமா: நீண்ட காலம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகள் சந்திக்கும் சவால்கள் என்ன? – thirupress.com

தமிழ் சினிமா: நீண்ட காலம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகள் சந்திக்கும் சவால்கள் என்ன? – thirupress.com

70
0

கொரோனா பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது திரையரங்கங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

வரும் நாட்களில் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்போது, திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திரையரங்கங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சில வாரங்கள் தேவைப்படும் என்கிறார் கோவையைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் பாலசுப்பிரமணியம்.

“கொரோனா பொது முடக்கம் காரணமாக பல்வேறு துறைகளும் மிகுந்த பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதேபோல் திரைத்துறையும் திரையரங்கங்களும் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. திரையரங்க உரிமையாளர்களுக்கும், அதில் பணிபுரிபவர்களுக்கும் கோவிட் பரவல் கடினமான காலகட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலுள்ள திரையரங்கங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக சுமார் 1,000 திரையரங்கங்கள் உள்ளன. ஒரு திரையரங்கத்தில் குறைந்த பட்சம் 25 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்றால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்திற்காக திரையரங்கங்களை நம்பியுள்ளனர். மிக நீண்ட நாட்களாக உரிய வருவாய் கிடைக்காததால் இவர்கள் அனைவரும் பெரும் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.

தற்போது மீண்டும் திரையரங்கங்கள் திறக்கப்பட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களையும், ஆங்கில திரைப்படங்களையும் முதற்கட்டமாக வெளியிட்டுள்ளோம்.